கல்வி தொடர்பான உதவிக்குறிப்புகள்
இன்றைய உலகு தொழில்நுட்ப வளர்ச்சியாலும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளாலும் நாளுக்குநாள் பல்வேறு வளர்ச்சிகளைக் கண்டுவருகின்ற நிலையில், இவை அனைத்திற்கும் அடிப்படையாக கல்வியே காணப்படுகின்றது. இன்று ஒவ்வொருவரிடையேயும் கற்றலின் தேவை வெகுவாக உணரப்பட்டுள்ளது. ஒரு நாட்டிற்குத் தேவையான பொருத்தமான எதிர்காலத் தலைவர்களை உருவாக்க வேண்டிய பாரிய பொறுப்பும் கல்விக்கு உள்ளது.
கல்வி என்பது பிள்ளையின் உள்ளே இருக்கின்ற ஆற்றலை வெளிக்கொண்டு வருவதாகும். கல்வியை வழங்குவதில் சமூகத்தின் பங்கும் முக்கியமானதாகும்.கல்வி மூலமே அறிவு சார்ந்த சமூகம் உருவாக்கப்படுகின்றது. அதுமட்டுமன்றி சமூகத்திலே மாற்றத்தினை ஏற்படுத்துவதில் பிரதான பங்கு கல்விக்கு உள்ளது.
சமூக வாழ்க்கைக்குப் பொருத்தமானவற்றைக் கற்பதில் ஈடுபடுகின்ற சமூகச்செயன்முறையே கல்வியாகும். இதனடிப்படையில் கற்றலுக்கு அத்திவாரமிடுகின்ற இடம் என்ற வகையில் பாடசாலைக்கு பிரதான இடமுண்டு.சமூகமாற்றத்திற்கு ஆசிரியர்களே பிரதான காரணமாக அமைகின்றனர். ஆசிரியர்களால் மட்டுமே கல்விமூலம் மாற்றத்தினை ஏற்படுத்தவும், அதற்கான வழிகாட்டல்களை வழங்கவும் நல்ல சமூகப்பிரஜைகளை உருவாக்கவும் முடியும்.
பிள்ளையானது பாடசாலைக் கற்றலில் தான் பெற்ற அறிவினைக் கொண்டு சூழலில் நடத்தை மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் செல்வாக்கு செலுத்தும் பிரதான காரணயாகக் கல்வியே காணப்படுகின்றது. அத்துடன் நாட்டில் ஏற்படும் பொருளாதார அபிவிருத்திக்கேற்ப கல்விக்கான செலவினங்களும் மாற்றமடையும் தன்மையுடையனவாக அமைகின்றன.குறிப்பாக இதுவரை காலமும் இலங்கையில் கல்விக்கான நிதி 3.5 சதவீதமாக காணப்பட்டு வந்தமையும் 2017ம் ஆண்டு முதல் 7.5சதவீதமாக உயர்த்தப்பட்டதையும் காணமுடிகிறது.
இலங்கையில் இலவசக்கல்வி நடைமுறையில் உள்ளது. தரம் - 11 வரை கட்டாயக்கல்வி என்ற முறையும் காணப்படுகின்றது. இத்தகைய தன்மையினால் வறிய மாணவர்களும் பொருளாதாரப் பிரச்சினைகளின்றி தமது கற்றலை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது.
மேலும் ஒவ்வொரு ஆட்சிமாற்றங்கள் ஏற்படும் போதும் கல்விக்கான நோக்கங்களும் மாறுபடுகின்றன.குறிப்பாக மனனம் செய்யும் கல்வி, ஆசிரியர் மையக்கல்வி, மாணவர் மையக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி என கற்றல், கற்பித்தல் முறைமைகள் காலத்தினதும் சமூகத்தினதும் தேவைக்கேற்ப மாற்றமடைந்து வருகின்றன.
பாடசாலைக்கற்றலில் மாணவர்கள் அரசியல் தொடர்பான விடயங்களைக் கற்கும் போது அது தொடர்பான தெளிவு சமூகத்திற்கும் சென்றடைகின்றது.குறிப்பாக க.பொ.த. உயர்தரத்திலே கலைப்பிரிவில் அரசியல் விஞ்ஞானம் என்ற பாடத்தைக்கற்றல்.இவ்வகையில் கற்றலினூடாக சமூகமாற்றம் ஏற்படுவதனை அவதானிக்க முடிகின்றது.
மற்றும் தொழிநுட்பவியல்சார் கல்வியும் சமூக மாற்றத்தினை ஏற்படுத்துவதில் பிரதான பங்கு வகிப்பதனை அவதானிக்க முடிகின்றது. கணினி, இணையம் போன்ற தொழிநுட்பங்களின் ஊடாக ஒவ்வொருவரும் பலவிடயங்களைக் கற்கின்றனர்.இதற்கு தொழிநுட்பவியல்சார் கருவிகளை எவ்வாறு உபயோகிப்பது தொடர்பான அறிவு கல்வி மூலம் ஏற்படுத்தப்படுகின்றமை முக்கிய விடயமாகும். உதாரணமாக தகவல் தொழிநுட்பம் எனும் பாடம் அறிமுகப்படுத்தப்பட்டு க.பொ.த. சாதாரண தரத்திலும், உயர்தரத்திலும்,பல்கலைக்கழகக் கல்வியிலும் பிரதானமாக அமைகின்றது. இதனால் ஒவ்வொருவரும் தமக்குத் தேவையான விடயங்களை இணையத்தில்தேடிக் கற்க எத்தனிக்கின்றனர். இத்தகைய தொழிநுட்ப வளர்ச்சியானது சமூகத்தினிடையே பெரும் மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இன்று மிகவேகமாக மாறிவரும் சமூகத்தில் ஆங்கிலமொழி பிரதான இடத்தைப் பெற்றுள்ளது. தொழில் ரீதியாகவும் வேறு தேவைக்காகவும் மிக முக்கியமாகக் கருதப்படுவது ஆங்கில மொழியாகும்.குறிப்பாக நேர்முகத் தேர்வுக்கு செல்லும் போது ஆங்கில அறிவு எத்தகைய மட்டத்தில் உள்ளது என்பதனைப் பொறுத்தே வேலை வழங்குகிறார்கள். ஆங்கிலமொழிக் கல்வியின் முக்கியத்துவத்தினை மையமாகக் கொண்டு இலங்கையின் கல்வி திட்டங்களிலும் சில செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் தனிமனிதனை சமூக வினைத்திறன் கொண்டவனாக மாற்றுவதற்கு தொழிற்கல்வி அவசியமானதாக அமைகின்றது. சமூகத்தில் ஒருவரது தொழிலினைக் கொண்டே அவரது அந்தஸ்து தீர்மானிக்கப்படுகிறது. இன்றைய சூழலில் தொழில் பற்றிய கல்வி அனைவருக்கும் மிகவும் அவசியமானதாகக் காணப்படுகின்றது. இவ்வகையில்,தொழிற்கல்வி தொடர்பாக இலங்கையில் பலவேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.தொழிற்பாடங்கள் கலைத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளமை, வாழ்க்கைத்தேர்ச்சி, விவசாயம், தொழில்நுட்பவியல் போன்ற பாடங்கள் அறிமுகம் என்பன அவற்றில் சிலவாகும்.
பாடசாலையை விட்டு நீங்கியவர்களை இணைத்து தொழிற்பயிற்சிகளை வழங்கல், தொழிநுட்பக் கல்லூரிக் கற்கை நெறிகள் என்பனவும் இவற்றில் அடங்குகின்றன.
இவ்வாறு அனைவரும் தொழிலினைப் பெற்றுக் கொள்கையில் கல்வியின் மூலம் சமூகம் மாற்றமடைவதனைக் காண முடிகிறது.
இனம், நிறம், சமூக நிலைமை என்பவற்றைக் கவனத்திற் கொள்ளாது வயது, திறமை, நுண்ணறிவு என்பவற்றில்சமவாய்ப்பான கல்வியை வழங்குதல் ஜனநாயக கல்வியாகும். இலங்கையில் இதற்கான நடவடிக்கைகளாக இலவசக் கல்வி,இலவச சீருடை,இலவசப் பாடநூல்,இலவச மதிய உணவு,புலமைப் பரிசில்கள் போன்றவை இருப்பதோடு கல்வியானது எல்லோருக்கும் உரித்துடையதாக பரவலாக்கப்பட்டுள்ளது.
இன்றைய காலத்திலே ஆண்களை விட பெண்கள் கல்வித்தரத்திலே முன்னிலை வகிப்பதனை காண முடிகின்றது.இது கல்வியினால் ஏற்பட்ட சமூக மாற்றமாகவே இனங்காணப்படுகின்றது. இவை தவிர தொலைக்கல்வி, வாழ்நாள் நீடித்த கல்வி, விழுமியக்கல்வி போன்றவற்றின் மூலமாகவும் சமூக மாற்றம் ஏற்படுவதனை அவதானிக்க முடிகின்றது.
ஒட்டுமொத்தமாக உற்றுநோக்குகின்ற போது கல்வி மூலம் ஏற்படுத்தப்படும் சமூகமாற்றமானது நிரந்தரமானதாக உள்ளதோடு மட்டுமல்லாமல் கற்றலினால் ஏற்படும் அறிவானது பல சமூகப்பிரச்சினைகளுக்கு தீர்வாகவும் அமைந்து விடுகின்றது என்பதில் ஐயமில்லை
- புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பாக
இலங்கையின் கல்விமுறை தொடர்பில் பல வாதப் பிரதிவாதங்கள் இருந்தாலும் பெரும்பாலான கல்வியியலாளர்களால் விமர்சனத்திற்குள்ளாக்கப்படும் கல்விக்கொள்கையாக தரம் ஐந்தில் நடத்தப்படும் புலமைப்பரிசில் பரீட்சை முறைமையே காணப்படுகிறது.
பாரிய எதிர்மறை விளைவுகளை உருவாக்கிவருகின்ற இந்த பரிட்சை தற்போது தேவைதானா? என்ற கேள்வி பலரிடம் எழுந்துள்ளது.
புதிய வளர்ச்சி அடையாத கிராமங்களில் உள்ள வளப்பற்றாக்குறையான பாடசாலைகளில் கல்வி கற்கும் திறமையான மாணவர்களை இனக்கண்டு அவர்களை வளமான அல்லது விரும்பிய பாடசாலைகளில் கல்வியை தொடர்வதற்க்கும் வாய்ப்பளிப்பதற்க்கும் அவர்களின் கல்வி உதவி தொகை ஒன்றினை வழங்குவதற்காகவும் உருவாக்கப்பட்டதே இந்த புலமை பரிசில் பரீட்ச்சைத்திட்டம் ஆகும்.
இதில் சித்தியடையும் அரச உத்தியோகஸ்த்தரின் பிள்ளைகள் மற்றும் வசதி படைத்தவர்களின் பிள்ளைகளுக்கு குறித்த உதவி தொகை வழங்கமுடியாது என்பதும் இப்பரீட்ச்சையின் நிபந்தனைகளில் ஒன்றாக இருப்பினும், இப்பரீட்சையில் சித்தியடையும் பிள்ளைகள் அரச உத்தியோகஸ்த்தர்களின் பிள்ளைகள் ஆகவும் தனவான்களின் பிள்ளைகளுமாகவுமே உள்ளனர்.
இவர்கள் பல்லாயிரக் கணக்கான பணத்தையும் நேரத்தையும் செலவு செய்து தங்களது பிள்ளைகளை சித்தி அடைய செய்வதன் மூலம் தாங்கள் அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதன் மூலம் இப்பரீட்சையின் நோக்கம் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது.
இதிலும் குறிப்பாக சித்தியடையும் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் வளப்பெருக்கமுள்ள மாணவர்களாகவே இருக்கின்றனர். ஆகவே இப்பரீட்சை உருவாகப்பட்டதன் நோக்கம் தரம் மாறி போவது உணரக்கூடியதாக உள்ளது.
சிறுவர்களை உடல்ரீதியாகவும் , உளரீதியாகவும் துன்புறுத்த கூடாது என்ற சட்டங்களை அமுல்படுத்தி வரும் இலங்கை அரசாங்கம் பத்து வயது சிறுவர்களின் அடிப்படை உரிமைகளை மீறத்தூண்டும் இப் பரீட்சையை தொடர்ந்தும் நடத்தி வருவது வியப்புக்குரியதாகவே உள்ளது.
குறித்த பரீட்சை காலங்களில் தரம் ஜந்தில் கல்வி கற்கும் மாணவர்களை பெற்றோர் சராசரியாக ஒரு மனிதன் உறங்க வேண்டிய நேரத்தை விடவும் குறைவான நேரமே உறங்க விடுவதுடன் பாடசாலை முடிந்ததும் வீட்டிற்க்கு சென்று உடைமாற்றவோ, உணவு உண்பதற்குக் கூட போதிய நேரம் வழங்கப்படாமல் தனியார் வகுப்புக்கள் எனவும், தனிப்பட்ட வகுப்புக்கள் எனவும் அலைக்களிக்கப்படுகின்றனர்.
இக் காலப்பகுதியில் சிறுவர்கள் மாணவர்கள் கடும் மன அழுத்தங்களுக்கும், உடல்ரீதியான அழுத்தங்களுக்கும் உள்ளாவதுடன் சிலர் நோய்வாய்ப்படும் சந்தர்ப்பங்களும் ஏற்பட்டுள்ளது. இப் பரீட்சை மாணவர்களுக்கான பரீட்சை அல்லாமல் பெற்றோர்கள் தங்களது கெளரவத்திற்கான பரீட்சையாக பார்க்கும் மனப்போக்கும் அதிகரித்திருக்கின்றது.
இதனால் அலுவலகங்களில் பணி புரியும் பலர் தங்களுக்குள் முரண்பட்டு கொள்வதுமுண்டு. அதை விட கொடுமை ஒரே பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் கூட தங்களுக்குள் முரண்பட்டுக்கொள்வதுடன் இவை நேரடியாக பரீட்சையில் பங்குபற்றாதவர்களின் புறக்காரணிகளாக அமைகின்றது.
இதை விடவும் இந்த பரீட்சையில் தோற்றுகின்ற மாணவர்கள் தங்களது சிறுவர் பராயத்தில் ஒரு மாணவன் இன்னொரு மாணவனை தனது போட்டியாளனாக பார்க்கின்ற மனப்பான்மை தோன்றுவதுடன் தங்களுக்குள் பகைமையை வளர்த்துக்கொள்கின்றனர்.
இவை அனைத்தையும் விட மாணவர்களை நேரடியாக பாதிக்கும் விதத்திற்கு உள்ளாக்கும் நிலை பரீட்சை பெறுபேறுகள் வெளியானதும் ஏற்படும் நிலையாகும். பரீட்சைப் புள்ளிகள் வெளியானதும் சித்தி பெற்ற மாணவர்களை ஊடகங்களும் பாடசாலைகளும் கொண்டாடும் போது சித்தி அடையாத மாணவர்களின் மனங்களில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தி விடுகின்றது.
நான் நினைக்கின்றேன் ஒரு பிள்ளையின் பாடசாலை வாழ்க்கையில் இது தான் அவர்களுக்கான முதல் பேரிடியாக இருக்கலாம். தங்களைத்தாங்களே ஓரளவு பக்குவப்படுத்திக்கொள்ளும் வயதடைந்த உயர்தர மாணவர்களே பரிட்சையில் தோற்கும் போது தற்கொலை வரை செல்லும் நிலையில், ஒன்றும் அறியாத சிறுவர்கள் எவ்வளவு பாதிக்கப்படுவார்கள் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவர்களுக்கு தற்கொலை செய்வதற்க்குக்கூட தெரியாத வயதாக இருப்பதனாலேயே தற்கொலைகள் இடம்பெறுவதில்லையே தவிர மனதளவில் அவர்கள் தற்கொலை செய்துதான் கொள்கின்றனர்.
சித்தி பெற்ற மாணவர்களுக்கு பொன்னாடை போர்த்தியும், பாரிய வரவேற்பு நிகழ்வுகளை நடத்தியும் அவர்களை மேடையேற்றி முடி சூட்டிக் கொண்டாடுவதனால் அந்த சிறுவர்கள் தாங்கள் பெரிதாக ஒன்றை சாதித்து விட்டதாகவும், இனி தாங்கள் தான் இந்த பாடசாலையின் கல்விமான்கள் என்ற எண்ணமும் தலைக்கணமும் கூட அவர்களது நடவடிக்கைகளில் மாற்றங்களை காட்ட முற்படுகின்றது. இதன் விளைவாக புலைமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்கள் பலர் சாதாரண தர மற்றும் உயர் தர பரீட்சையில் சித்தியடைய முடியாத நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.
பெற்றோர்களுக்குள் குரோதங்களையும், மாணவர்களுக்குள் உளத்தாக்கங்களையும் உருவாக்கும் இந்த பரீட்சை இனியும் தொடரத் தான் வேண்டுமா....?